Gradient Canopyயில் எங்கள் சூழலியல் உத்தியில் ஒரு குறிப்பிட்ட வகையான மரங்களே பிரதானமாக அமைந்துள்ளன, அவை கருவாலி மரங்கள். கலிஃபோர்னியா நிலப்பரப்பின் அடையாளச் சின்னமாக விளங்கும் கருவாலி மரங்கள் ஒருகாலத்தில் சிலிக்கான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பரவலாகக் காணப்பட்டன. பூர்வீகக் கருவாலி மரங்கள் வறட்சியைத் தாங்கும், நெருப்பால் பாதிக்கப்படாது, காற்று மாசுபாட்டை அகற்றும் மற்றும் வளிமண்டலத்திலிருந்து கார்பனை உறிஞ்சும் திறன் கொண்டவை. கூடுதலாக, கருவாலிக் காடுகள் உள்ள சூழ்மண்டலங்கள் கலிஃபோர்னியாவில் மிக உயர்ந்த தாவர மற்றும் விலங்குப் பன்முகத்தன்மையை நிலைநிறுத்துகின்றன, இவை 2,000க்கும் அதிகமான தாவர இனங்களையும் 5,000 பூச்சி இனங்களையும் ஆதரிக்கின்றன. நூற்றுக்கணக்கான பறவைகள், பாலூட்டிகள் மற்றும் பிற வனவிலங்குகள் உணவு, நிழல் மற்றும் தங்குமிடத்திற்காகக் கருவாலி மரக் காடுகளின் செழுமையை நம்பியுள்ளன.
கருவாலி மரங்கள் உட்பட பாக்காய், சிக்கமோர், வில்லோ போன்ற பிற பூர்வீக மர இனங்களைக் கொண்ட நிலப்பரப்பில் மர நிழற்பரப்பை இணைக்கும் விதத்தில் வடிவமைப்பதற்காக உள்ளூர் விஞ்ஞானிகளுடன் இணைந்து நாங்கள் பணியாற்றினோம். இதுபோன்ற தொடர்ச்சியான மர நிழற்பரப்புகள், செயற்கைச் சுற்றுச்சூழல் வழியாக வனவிலங்குகள் நடமாடும் பாதைகளை உருவாக்குவதோடு நகர்புறப் பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பதையும் குறைக்கிறது.
மகரந்தச் சேர்க்கைக்கு உகந்த பூர்வீகச் செடிகள் Gradient Canopyயின் பூர்வீக மரங்களுக்கு அடித்தளமாக அமைவதோடு உள்ளூர் பட்டாம்பூச்சிகள், பறவைகள் மற்றும் தேனீக்களுக்குத் தேவைப்படும் வளங்களையும் வழங்குகின்றன. நிலப்பரப்பின் ஒரு பகுதி, குறிப்பாக வட அமெரிக்காவின் மேற்கத்திய மொனார்க் பட்டாம்பூச்சிகளை ஆதரிப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. கிடைக்கக்கூடிய சிறந்த அறிவியல் தகவல்களைப் பயன்படுத்தி மில்க்வீட் செடிகளின் சரியான கலவையை உருவாக்குகிறோம். இந்தச் செடிகள் மொனார்க் பட்டாம்பூச்சிகளின் முட்டைகள் மற்றும் கம்பளிப் புழுக்களுக்குப் பயன்படுகின்றன. மேலும் அவற்றின் பூக்கள் பட்டாம்பூச்சிகளின் நீண்டதூர இடம்பெயர்தலுக்கு உதவும் உணவை வழங்குகின்றன.
Gradient Canopyயில் மகரந்தச் சேர்க்கைக்கு உகந்த பூர்வீகச் செடிகளுடன், பயிரிடப்பட்ட தோட்டப் படுக்கைகளையும் தேனீக்களுக்கான பெட்டிகளையும் வைத்துள்ளோம். இது உள்ளூரில் விளைந்த ஃபிரஷ் உணவுகள் சமூகத்தினருக்குக் கிடைப்பதை நோக்கமாகக் கொண்ட லிவிங் பில்டிங் சேலஞ்சின் நகர்ப்புற வேளாண்மையின் பிரதான இலக்கை அடைய உதவுகிறது. இரண்டு தோட்டப் படுக்கைகளும் எங்கள் கஃபேக்களுக்கும் Googler பயிற்சி சமையலறைகளுக்கும் உணவை உற்பத்தி செய்வதோடு, உள்ளூர் சூழலுக்கேற்ப இயற்கை நிலங்களில் பயிரிடுவதையும் அதைப் பராமரிப்பதையும் இணைந்து செய்வதன் மூலம் மீள் திறனுடன் கூடிய உள்ளூர் உணவு உற்பத்தியில் கூடுதல் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதை விளக்கிக் காட்டுகின்றன.