Cafe @ Mountain View

எங்கள் புதிய பொது கஃபேவில் சூழலுக்கேற்ப தயார் செய்யப்படும் உணவுகளை வழங்குவதன் மூலம் சமூகத்தை ஒன்றிணைக்கிறோம்.

3 நிமிடங்கள்

Google Visitor Experienceஸில் உள்ள Cafe @ Mountain View. படம்: மார்க் விக்கென்ஸ்.

Google Visitor Experienceஸில் உள்ள Cafe @ Mountain View. படம்: மார்க் விக்கென்ஸ்.

Gradient Canopyயில் Google Visitor Experienceஸில் Google கலாச்சாரத்தின் முக்கிய அம்சமான எங்களின் உணவுத் திட்டத்தில் முதல்முறையாகப் பொதுமக்களும் கலந்துகொள்ளலாம். புதிய Cafe @ Mountain View பொதுமக்கள் அமர்ந்து உண்பதற்கென முதல்முறையாக நாங்கள் திறந்துள்ள இடமாகும். சமூகத்தினர் அங்கே உணவை வாங்கலாம், கிரகத்தைப் பாதுகாக்க எங்களின் நற்சூழல் பாதுகாப்பு முன்னுரிமைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் தொடர்பாகக் கருத்தைப் பகிரலாம்.

1999 முதல், எங்களின் உணவுத் திட்டம் Googleளின் படைப்பாற்றல், கூட்டுப்பணி மற்றும் சமூகக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. மகிழ்ச்சி நிறைந்த இடங்களில் சுவையான மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்குவதன் மூலம், மக்களுடன் தொடர்பை உருவாக்கி யோசனைகளைப் பரிமாறிக்கொள்வதை ஆதரிக்க நாங்கள் பணியாற்றுகிறோம். எங்களின் உணவுகள் எண்ணற்ற கண்டுபிடிப்புகளுக்கு உத்வேகம் அளித்துள்ளன. உதாரணத்திற்கு Gmail, இதற்கான யோசனை எங்களின் கஃபேக்களில் ஒன்றில் மதிய உணவு வேளையில் நடந்த உரையாடலின்போது தோன்றியது.

Googleளின் உணவுத் திட்டம் எப்போதுமே சமூகத்தைப் பற்றியதாகவே உள்ளது. எங்கள் வளாகங்களில் அதை உருவாக்குவதும் உணவை வாங்குதல் மற்றும் தயாரித்தலின் மூலம் அதிக அளவிலான பிராந்தியங்களுடன் இணைத்திருப்பதும் இதில் அடங்கும். சமூகத்தின் மீதான அக்கறை என்பது எங்களின் உணவு சமைப்பது தொடர்பான முக்கியக் கொள்கைகளில் ஒன்றாகும். அதாவது, உணவு தொடர்பாக நாங்கள் எடுக்கும் முடிவுகள் Googleளுக்கு உள்ளேயும் வெளியேயும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்கிறோம். மெனுக்களை உருவாக்குவதில் இருந்து எங்கள் உணவை எங்கிருந்து வாங்குகிறோம், அதை எப்படிச் சமைக்கிறோம் என்பது வரை எங்களின் உணவுத் திட்டம் உள்ளூர் விநியோகச் சங்கிலிகளிலும் பரந்த நமது கிரகத்திலும் எப்படி நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதைப் பற்றியே தொடர்ந்து சிந்திக்கிறோம்.

நேர்மறையான மாற்றத்தை ஊக்குவித்து எதிர்காலத்தில் உணவு அமைப்புகளுக்குச் சிறந்த வழியை உருவாக்க, முற்போக்குச் சிந்தனையுடைய கூட்டணிகளையும் நற்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்புகளையும் எங்களின் உணவுத் திட்டம் மேற்கொள்கிறது. உள்ளூர் சப்ளையர்களுடனான எங்கள் நல்லுறவால், எங்கள் சமையல் நிபுணர்கள் உள்ளூரிலும் அந்தந்தப் பருவத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டும் சுவையான உணவுகளை உருவாக்குகிறார்கள். உணவுப் பொருட்களுக்கான சப்ளையர்களைக் கவனமாக ஆராய்ந்து, எங்கள் மதிப்புகளை (நற்சூழல் பாதுகாப்பு, பன்முகத்தன்மை கொண்ட பிசினஸ் உரிமை, சமூகத்தை மேம்படுத்துதல் உட்பட) பின்பற்றுபவர்களுடன் மட்டுமே பணியாற்றுகிறோம். எங்களின் கார்பன் அளவைக் குறைக்க மீளாக்க வேளாண்மை, பொருட்களைத் தரமேற்றி உருமாற்றுதல், குறைந்த அளவிலான பேக்கேஜிங் ஆகிய முறைகளைப் பின்பற்றும் சப்ளையர்களுக்கே நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். அத்துடன், முடிந்தவரை வெளிநாட்டிலிருந்து விமானத்தில் கொண்டு வரப்படும் பொருட்களைவிட, உள்ளூரில் கிடைக்கும் பொருட்களையே பயன்படுத்துகிறோம். இந்த வகையில், சுற்றுச்சூழலுக்கும் எங்களை வளர்க்கும் சமூகங்களுக்கும் சிறந்ததாக இருக்கும் பொறுப்புள்ள நடைமுறைகளைப் பின்பற்றும்படி உணவு மற்றும் பானத் தொழில்துறையை ஊக்கப்படுத்துகிறோம்.

உணவுப் பொருட்களை எங்கிருந்து பெறுகிறோம் என்பதைத் தவிர்த்து, எங்களின் உணவுத் திட்டத்தில் இரண்டு முக்கிய நற்சூழல் பாதுகாப்பு நடைமுறைகளின் மீது கவனம் செலுத்துகிறோம்: உணவு வீணாக்கப்படுவதைக் குறைத்தல் மற்றும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குகளைத் தவிர்த்தல். மக்கள் சாப்பிடுவதற்காகத் தயாரிக்கப்படும் மொத்த உணவில் சுமார் 35% அல்லது கிட்டத்தட்ட 133 பில்லியன் பவுண்டு உணவு ஒவ்வொரு ஆண்டும் வீணாக்கப்படுகிறது என்பதை நாங்கள் அறிவோம். Googleளின் நற்சூழல் பாதுகாப்பு இலக்குகளை ஆதரிக்க, 2025க்குள் குப்பைக் கிடங்கில் ஓர் உணவையும் வீணாக்காமல் இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். அதற்கான வழிமுறை உணவுப் பொருட்களைப் பெறும்போதும் வாங்கும்போதும் கழிவைத் தவிர்த்தல், எங்கள் சமையலறையில் உணவு தயாரிக்கும் செயல்பாடுகளில் ஏற்படும் கழிவைத் தவிர்க்க தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எங்கள் சமையலறைகளையும் கஃபேக்களையும் மேம்படுத்துதல், மீதமிருக்கும் உணவு மீண்டும் பயன்படுத்தப்படுவதையோ முறையாக அகற்றப்படுவதையோ உறுதிசெய்துகொள்ளுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் மூன்று பகுதி கொண்ட அணுகுமுறையை நாங்கள் கொண்டுள்ளோம். 2014 முதல் 2021 வரை கிட்டத்தட்ட 10 மில்லியன் பவுண்டு உணவு, குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படாதபடி தடுத்துள்ளோம்.

நாங்கள் உணவு சமைக்கும் இடங்களில் பிளாஸ்டிக்கைக் குறைக்கவும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம். நாங்கள் மொத்தமாகவும் முடிந்தவரை புதுமையான மற்றும் குறைவான பேக்கிங்கில் வரும் தயாரிப்புகளைத் தேர்வுசெய்தும் வாங்குவோம். அத்துடன் தயாரிப்புகளை இடமாற்ற வயர் கேஜ்களையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம். ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய யோகர்ட் கப்புகளுக்குப் பதிலாகப் புதிய யோகர்ட் விநியோகக் கூடத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்றும் ஆலோசித்தோம். அத்துடன் ஒருமுறை மட்டும் பயன்படுத்திவிட்டு கழிவில் போடப்படும் பேக்கேஜ் பயன்பாட்டைத் தவிர்க்க பெரிய கண்டெய்னர்களில் தின்பண்டங்களை வழங்குகிறோம்.

Cafe @ Mountain Viewவில் ஃபிரஷாகச் சமைக்கப்படும் உணவு வழங்கப்படுகிறது. படங்கள்: மார்க் விக்கென்ஸ்.

இப்போது Cafe @ Mountain Viewவில் எங்கள் உணவுத் திட்டம் பொதுவில் கிடைக்கிறது, அங்கே உணவை வாங்கலாம். உணவு மூலம் கிரகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த நாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் சேர சமூகத்தை வரவேற்கிறோம். சிறிது நேரம் ஒதுக்கி தாவர அடிப்படையிலான உணவு வகைகளை நாங்கள் எப்படி உருவாக்குகிறோம் என்று பாருங்கள். எங்கள் சமையல் நிபுணர்கள் நற்சூழல் பாதுகாப்பு மற்றும் பலதரப்பட்ட சுவைகளைக் கருத்தில் கொண்டு பருவகால மற்றும் உள்ளூரில் அறுவடை செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்திச் சமைத்த கலிஃபோர்னியா சார்ந்த உணவுகளைச் சுவைத்துப் பாருங்கள். சமையல் தொடர்பான எங்கள் படைப்பாற்றல், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் நலனுக்கான எங்கள் உறுதிப்பாட்டைப் பகிர்ந்துகொள்ள நாம் அனைவரும் ஒன்று சேரக்கூடிய இடமாக இது திகழ்கிறது.