Gradient Canopy மூலம் திட்டத் தளத்தை நிலப்பரப்புடன் ஒருங்கிணைக்கும் விதமாகவும், காலப்போக்கில் அதை இன்னும் மீள்தன்மை கொண்டதாகவும் மாற்றுவதே இத்திட்டத்தின் குறிக்கோளாக இருந்தது. எங்களைப் பொறுத்தவரை "மீள்தன்மை" என்பது பிராந்தியத்தின் நீண்டகாலச் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்குப் பங்களிக்கும் இடங்களைக் குறிக்கிறது, இவ்விடங்களில் பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டாலும்கூட மக்களும் வனவிலங்குகளும் செழிப்பாக வாழ முடியும். Gradient Canopyயில் வனவிலங்குகளுக்கு முக்கியமாக ஆதரவளிக்கும் வரலாற்றுச் சூழ்மண்டலக் கூறுகளை மீண்டும் அமைக்க நாங்கள் பணியாற்றுகிறோம். எனினும் நகர்ப்புறச் சூழலில் வனவிலங்குகளுக்கு, குறிப்பாக பாட்டுப் பறவைகள், சிட்டுக்குருவிகள், ஹம்மிங் பறவைகள், வார்ப்ளர்கள் போன்ற உள்ளூர் பறவைகளுக்கு ஆபத்துகள் இருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இதன் காரணமாகவே பறவைகளைப் பாதுகாக்கும் வடிவமைப்பு உத்திகளுடன் Gradient Canopyயை வடிவமைத்துள்ளோம்.
கட்டடங்களில் உள்ள கண்ணாடிகள் பறவைகளின் எண்ணிக்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும், எனவே Gradient Canopyயில் கட்டடம், நிலப்பரப்பு மற்றும் விளக்குகளை டிசைன் கிரெடிட்டுக்கான LEED இன்னோவேஷன் சிஸ்டத்துடன் (கட்டடத்தின் மேல் பறவை மோதல்களைக் குறைப்பதற்கான பறவை மோதல் தடுப்பு நடவடிக்கை) இணங்கும்படி வடிவமைப்பது முக்கியமான ஒன்றாக இருந்தது.
பறவைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கட்டடங்களை உருவாக்க முன்னணித் தரநிலைகள் மற்றும் பரிந்துரைகளைப் பின்பற்றும் நோக்கத்தோடு சுற்றுச்சூழல் ஆலோசகர்களான H.T. Harvey & Associates நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றினோம். Gradient Canopyயில் பறவைகளுக்கு ஏற்ற வடிவமைப்பை இரண்டு முக்கிய வழிகளில் கட்டமைத்தோம்: முதலில் கட்டடத்தின் கண்ணாடியில் பிரதிபலிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையைக் குறைத்தல், இரண்டாவதாக உட்புற மற்றும் வெளிப்புறத்தில் லைட்டிங் நுட்பங்களின் மூலம் கட்டடத்தின் இரவு நேர ஒளி மாசுபாட்டைக் குறைத்தல்.
பறவைகள் மற்றும் மனிதர்களின் கண்களுக்குக் கண்ணாடி தெரியாமல் இருந்தது, ஆனால் மனிதர்கள் காலப்போக்கில் ஜன்னல் சட்டங்கள், பிரதிபலிப்புத்தன்மை போன்ற காட்சிக் குறிப்புகள் மூலம் கண்ணாடி இருப்பதைத் தெரிந்துகொண்டனர். மற்றொருபுறம், பறவைகள் குறைந்த அளவிலான ஆழ் உணர்வையே கொண்டுள்ளன. மேலும் அவை பெரும்பாலும் நிலப்பரப்பு அல்லது வானத்தின் பிரதிபலிப்புகளை உண்மையானது என உணர்கின்றன. கண்ணாடியின் நிறமற்ற பண்பாலும் மோதல்கள் ஏற்படலாம். கட்டடத்தின் உள்ளே தாவரங்கள் அல்லது செடிகள் இருப்பதைக் கண்ணாடியின் மூலைகள் வழியாகப் பறவைகள் பார்க்கும்போது இந்த மோதல்கள் ஏற்படுகின்றன. அடிப்படையில், ஒரு கட்டடத்தின் கண்ணாடி அதன் நிறமற்ற பண்பு அல்லது பிரதிபலிப்பு மூலம் தாவரங்கள்/வானத்தை மிகத் தெளிவாகக் காட்டினால், அங்கே பறவை மோதல்களுக்கான வாய்ப்புகள் அதிகம்.
Gradient Canopyயில், முதலில் குறைந்த பிரதிபலிப்புத்தன்மை கொண்ட கண்ணாடியைப் பொருத்துவதே எங்களின் தீர்வாக இருந்தது. கண்ணாடித் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களால் சூரிய வெப்ப ஆதாயத்தைப் பாதிக்காமல் குறைந்த வெளிப்புறப் பிரதிபலிப்பை எளிதாகப் பெறலாம். இது கட்டடத்தின் பல்வேறு ஜன்னல்கள் மற்றும் முகப்புகளில் சிறந்த கண்ணாடியை அமைப்பதற்கு எங்களுக்கு உதவியது. கண்ணாடியில் ஸ்டிக்கர்கள், உட்பொதிக்கப்பட்ட பீங்கான் "ஃபிரிட்" போன்றவை அடையாளம் காணும் வகையில் நெருக்கமான இடைவெளியில் இருப்பதும் பறவைகளின் இறப்பைக் கணிசமான அளவில் குறைக்கலாம். ஏனெனில் பறவைகள் இவற்றை ஒரு தடையாக உணர்ந்து மேலும் பறக்க முயலாது. அமெரிக்கன் பறவைப் பாதுகாப்பு அமைப்பின் மிகச் சமீபத்திய வழிகாட்டுதலைப் பின்பற்றி, மிகச் சிறிய ஹம்மிங் பறவைகளுக்கும்கூட அதிகப் பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தோடு கண்ணாடிகளில் அடர்த்தியான அடையாளப் பேட்டர்ன் இருப்பதை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். Gradient Canopyயில், பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் ஒரு வார்த்தைப் புதிராக நாங்கள் ஃபிரிட்டை வடிவமைத்தோம், இந்தக் கண்ணாடியில் 30 வெவ்வேறு உள்ளூர் பறவை இனங்களின் பெயர்கள் 30 மொழிகளில் ஒன்றாக அச்சிடப்பட்டுள்ளன. இது ஓர் "ஈஸ்டர் முட்டை" வடிவில் வேடிக்கை மற்றும் புதிர் நிறைந்த ஒன்றாக இருக்கும். மேலும் அதிகச் செயல்பாட்டுடன்கூடிய பறவைப் பாதுகாப்பு வடிவமைப்பாகும்.